Popular Posts

Saturday, June 4, 2011

தமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம்/படித்ததில் ரசித்தது/கட்டுரை/சொற்சித்திரங்கள்/-

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாரதிதாசனை பாராமலே!
ஏகலைவன் துரோணரை மானசீக குருவாக ஏற்றதுபோலவே-தானும்
குருவாக ஏற்றுக்கொண்டார்!









பட்டுக்கோட்டையா? பாட்டுக்கோட்டையா?
-சின்னராசு- அவர்களுக்கு நன்றி----

துரோணரை நேரிலே கண்டு அவரிடம் பயிற்சி பெறாமலே அவரை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு வில்வித்தை படித்து அதில் தலை சிறந்தவானாய் விளங்கிய ஏகலைவன் மாதிரி, பாவேந்தர் பாரதிதாசனை நேரிலே பார்க்காமலே அவரை தனது மானசீக குருவாக ஏற்று பாரதிதாசனே வியந்து பாராட்டும் விதம் கவிஞராகத் திகழ்ந்தவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.


பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் அற்புதமான கவியாற்றலில் மனதை பறிகொடுத்து அவரிடம் மரியாதை செலுத்தி பழகியவர் கவியரசு கண்ணதாசன் ஆவார். அதே மாதிரி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் கண்ணதாசனிடம் அலாதியான அன்பை செலுத்தி வந்தார்.

கண்ணதாசன் சொந்தமாக படம் தயாரித்தபோது, அப்போது முன்னணியில் இருந்த ஒரு திரைப்பட கவிஞரிடம் தனது படத்திற்கு பாடல் எழுதித்தர கேட்டபோது, அந்த கவிஞர் மிக அலட்சியமாக, 'எனக்கு புதிதாக எழுத நேரமில்லை. இதில் ஏதாவது பாடல் தேறினால் எடுத்துக்கொண்டு போ' என்று பழைய காகிதங்களை தூக்கித் தந்ததாக வேதனையுடன் கண்ணதாசன் கூறினார்.

அதேசமயம் அந்த காலக்கட்டத்தில் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் படங்களுக்கு பாடல் எழுதி வந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை கண்ணதாசன் நேரில் பார்த்து, ஒரு பாடல் எழுதித் தருமாறு கேட்டபோது, அவர் மிகுந்த பற்றுதலோடு பாடல் எழுதித்தர இசைந்ததை கண்ணதாசன் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ளார்.

அந்த நாளில் தமிழ் சினிமா பத்திரிகை ஆசிரியர் ஒருவர் சில திரைப்பட கவிஞர்களை ஏளனமாகவும், கேலியாகவும் விமர்சித்து வந்தார். அந்த ஆசிரியரின் ஏளனத்துக்கு பலியானவர்களில் கவிஞர் கண்ணதாசனும் ஒருவர்.

ஒரு சமயம் ஒரு விழாவிற்கு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும், கண்ணதாசனும் வந்திருந்தார்கள். ஒருவரை ஒருவர் நலம் விசாரித்து பேசிக்கொண்டிருந்த நேரம், அப்பக்கமாக குறிப்பிட்ட அந்த சினிமா பத்திரிகையின் ஆசிரியர் வரவே பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் திடீரென பாய்ந்து அந்த சினிமா பத்திரிகை ஆசிரியரின் சட்டை கழுத்தை பிடித்துக் கொண்டார். அந்த ஆசிரியர் கவிஞர் கண்ணதாசனைப் பற்றி ஏளனமாக அந்த வாரத்தில் தன் பத்திரிகையில் எழுதி இருந்ததை பட்டுக்கோட்டையார் குறிப்பிட்டு, 'என்னடா கவிஞர்கள் என்றால் உனக்கு ஏளனமா? கருவாட்டு வியாபாரம் செய்கிற உனக்கு கவிதையைப் பற்றி என்னடா தெரியும்?'' என்று கேட்டு உதைக்கப் பொய்விட்டார்.

தனக்காக ஒரு மனிதரிடம் சண்டைக்கு போகிற அளவு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நடந்து கொண்டார் என்றால் அவருக்கு தன் மீதுள்ள மதிப்பு எவ்வளவு என கண்ணதாசன் நெகிழ்ந்து போனார்.

அதனால்தான் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் திடீர் மறைவுச் செய்தியை கண்ணதாசனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. 'பட்டுக்கோட்டை சாய்ந்ததா? இல்லை பாட்டுக் கோட்டையே சாய்ந்ததம்மா!' என்று கண்ணதாசன் பட்டுக்கோட்டையார் மறைவு குறித்து மிக உருக்கமாக பாடினார்.

சுமார் 29 வயதிலேயே காலமாகிவிட்ட பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தனது எழுத்தைப் போலவே உயர்ந்த சுபாவங்களை கொண்ட மனிதராவார். பொதுவுடமை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர்.

ஒரு சமயம் சென்னையில் நகரப் பேருந்தில் தான் பயணம் செய்து கொண்டிருந்தபோது, வழியில் ஒரு இடத்தில் சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு அங்கே பழுது பார்க்கும் வேலை நடப்பதை அறிவிக்க வாகனங்களுக்கு எச்சரிக்கையாக சிவப்புக் கொடி கட்டப்பட்டிருந்தது.

அதைப் பார்த்துக் கொண்டே வந்த பட்டுக்கோட்டையார் தன் அருகிலே இருந்த நண்பரிடம், 'எங்கே எல்லாம் பள்ளம் விழுந்து அது மேடாக நிரப்பப்பட வேண்டுமோ, அங்கே எல்லாம் சிவப்பு கொடி பறந்துதான் அந்த பணிகள் நடக்க வேண்டும் போலும்' என்றார்.

பொதுவுடமை லட்சியம் என்றால் வாழ்க்கையில்லாதவர்களை முதலில் கை தூக்கி விடுகின்ற பணிதான் முக்கியமானது. அந்தப் பணியில் நாட்டம் உள்ளவர்கள் சொந்த துன்பங்களை பெரிதுபடுத்தமாட்டார்கள்.

ஒரு சமயம் பொதுவுடமை இயக்கத்திற்காக நாடகம் நடத்த சென்றிருந்த பட்டுக்கோட்டையார் நாடகத்திற்கு சரியான வசூல் இல்லாமல் தங்கள் குழுவினருடன் பசி, பட்டினியுமாக சென்னை திரும்ப பேருந்தில் ஏறினார். பேருந்தில் அமர்ந்திருந்த தங்கள் குழுவினர் அனைவரும் சோர்ந்த முகத்துடன் காணப்பட்டார்கள். அவர்கள் சோகத்தை மாற்றி அவர்களுக்கு குதூகலத்தை தர பட்டுக்கோட்டையார் அங்கேயே ஒரு பாடல் எழுதி, அதனை சத்தமாக பாட ஆரம்பித்தார். அந்த பாடலை கேட்டதும் நாடக குழுவினருக்கு பசி பறந்துவிட்டது. அனைவரும் குதூகலமாக கைகளை தட்டி பாட ஆரம்பித்தார்கள்.

'சின்னக்குட்டி நாத்தனா
சில்லறைய மாத்துனா
குன்னக்குடி போற வண்டியில்
குடும்பம் பூரா ஏத்துனா!'

இந்த பாடலை கேட்டு மகிழ்ந்து அவரது குழுவினர், 'அண்ணே பாட்டு ரொம்ப அருமையா இருக்கு. இந்தப் பாட்ட அப்படியே ஒரு படத்துக்கு குடுங்கண்ணே'' என்று கேட்டுக் கொண்டார்கள். அதன்படியே அந்தப் பாடலை மாடர்ன்ஸ் தியேட்டர் தயாரித்த 'ஆரவல்லி' படத்திற்கு தந்துவிட்டார் பட்டுக்கோட்டையார்.

பட்டுக்கோட்டையார் சிறந்த தத்துவப் பாடல்கள் மட்டுமல்லாமல் நகைச்சுவையான பாடல்களும் எழுதுவதில் வல்லவர். அவரும் அந்த காலத்தில் ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்தி பாடல்கள் எழுதுவதுண்டு. ஆனால் அர்த்தம் விளங்குமாறு பாடல்கள் எழுதியதுதான் சிறப்பு!

'ஆறறிவில் ஓரறிவு அவுட்டு- சிலருக்கு
ஆறறிவில் ஓரறிவு அவுட்டு - இருக்கும்
ஐந்தறிவும் நிலைக்குமுன்னா
அதுவுங்கூட டவுட்டு!'


என்று மிக நயமாக பட்டுக்கோட்டை நையாண்டி செய்கிறார். 'நான் வளர்த்த தங்கை' என்ற படத்திலே போலி பக்தர்களை விநயமாகக் கேலி செய்கிறார்.

'பக்த ஜனங்கள் கவனமெல்லாம்
தினமும் கிடைக்கும் சுண்டலிலே... ஹா... ஹா...
பசியும், சுண்டல் ருசியும் போனால்
பக்தியில்லை பஜனையில்லை'

வெறும் கேலி கிண்டல் என்றில்லாமல் ஒரு சிறந்த சிந்தனைவாதியின் சீற்றமும் பட்டுக்கோட்டையார் பாடலிலே காணலாம். 'பாண்டித் தேவன்' என்ற திரைப்படத்தில் அவர் எழுதிய பாடலில் சில வரியை இங்கே காணலாம்.

'சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்
எத்தனையோ உண்மைகளை
எழுதி எழுதி வச்சாங்க
என்ன பண்ணி கிழிச்சீங்க!'

என்று ஆத்திரமாய் கேட்கிறார். அதேமாதிரி 'கண்திறந்தது' என்ற படத்தில் மிக புரட்சிகரமான வரிகளை பட்டுக்கோட்டையார் பாடலாக்கி இருக்கிறார்.

'வசதி இருக்கிறவன் தரமாட்டான், அவனை
வயிறு பசிக்கிறவன் விடமாட்டான்
வானத்தை வில்லா வளைச்சுக் காட்டுறேன்னு
வாயாலே சொல்லுவான் செய்ய மாட்டான்...

எழுதிப் படிச்சு அறியாதவன்தான்
உழுது ஒளச்சு சோறு போடுறான்.
எல்லாம் படிச்சவன் ஏதேதோ பேசி
நல்ல நாட்டைக் கூறு போடுகிறான் இவன்
சோறு போடுறான் அவன்
கூறு போடுறான்...'

என்கிறார் வேதனையுடன். இதே போல் 'சங்கிலித் தேவன்' என்ற திரைப்படத்தில் தொழிலாளர் மேன்மையை சொல்லுகிற ஒரு அருமையான பாடலை பட்டுக்கோட்டையார் எழுதி இருந்தார்.


'வீரத்தலைவன் நெப்போலியனும்
வீடு கட்டும் தொழிலாளி!
ரஷ்யா தேசத்தலைவன் மார்சல் ஸ்டாலின்
செருப்புத் தைக்கும் தொழிலாளி!
விஞ்ஞான மேதை ஜி.டி.நாயுடு
காரு ஓட்டும் தொழிலாளி!
விண்ணொளிக் கதிரி விவரம் கண்ட
சர்.சி.வி.ராமனும் தொழிலாளி
எதற்கும் உழைப்பு தேவை!

என்கிறார். 'பாண்டித்தேவன்' என்ற திரைப்படத்தில் இன்றைய நாட்டு நடப்பை சொன்னதுபோல பட்டுக்கோட்டையார் எழுதியுள்ள பாடல் சில வரிகள்.

'நாடு முன்னேற பலர்
நல்ல தொண்டு செய்வதுண்டு
நல்லதை கெடுக்கச் சிலர்
நாச வேலையும் செய்வதுண்டு
ஓடெடுத்தாலும் சிலர்
ஒற்றுமையாய் இருப்பதில்லை - இந்த
உண்மையை தெரிந்தும், நீ
ஒருவரையும் வெறுப்பதில்லை!'

என்கிறார். 'திருடாதே' திரைப்படத்தில் குழந்தைக்கு புத்தி சொல்வது மாதிரி பெரியவர்களுக்கே பொதுவுடமை தத்துவத்தின் சாறு எடுத்து கவிதையாக்கி ஊட்டி இருக்கிறார். அதில் சில வரிகளை பாருங்கள்.

'கொடுக்கிற காலம் நெருங்குவதால் - இனி
எடுக்கிற அவசியம் இருக்காது.
இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால்
பதுக்கிற வேலையும் இருக்காது.
ஒதுக்கிற வேலையும் இருக்காது.
உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா
கெடுக்கிற நோக்கம்
வளராது மனம்
கீழும் மேலும் புரளாது


பட்டுக்கோட்டையாரின் சிந்தனை செல்வமான அற்புதமான பாடல்களை குறைந்த காலத்திலேயே நிறைந்தளவு எழுதி இருக்கிறார். .

தமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம்/படித்ததில் ரசித்தது/கட்டுரை/சொற்சித்திரங்கள்/-

No comments: